தலச்சிறப்பு |
ஒருசமயம் விருத்திராசூரன் என்னும் அசுரன் இந்திராதி தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமைக்கு பயந்து தேவர்கள் சிவபெருமானை தஞ்சம் அடைந்தனர். இறைவனும், தேனீக்களாக மாறச் செய்து இக்கோயிலின் கருவறையில் கூடு கட்டி வசிக்கச் செய்தார். தேவர்கள் தேனீ வடிவில் வழிபட்டதால் இத்தலம் 'மதுவனம்' என்று அழைக்கப்பட்டது. தற்போது 'நன்னிலம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'மதுவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், பெரிய அளவிலான லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அம்பாள் 'மதுவனநாயகி' என்னும் திருநாமத்துடன், சிறிய அழகிய வடிவில் தரிசனம் தருகின்றாள். மூலவர் சன்னதி மாடக்கோயிலிலும், அம்பாள் சன்னதி கீழேயும் உள்ளது.
கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரியுடன் கூடிய சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். நடராஜர் சபை உள்ளது. கீழே பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, சனீஸ்வரர், சூரியன், பைரவர், நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. சூரியன் வழிபட்ட தலம்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். மாடக்கோயிலின் கீழே பிரம்மபுரீஸ்வரர் பெரிய லிங்க வடிவிலும், அகஸ்தீஸ்வரர் சிறிய லிங்க வடிவிலும் தரிசனம் தருகின்றனர். வைகாசி விசாகத்தன்று திருவிழா நடைபெறுகிறது.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|